புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!

புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
Published on

’புதுச்சேரியில் நண்பர்களுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறோம். தனித்து நிற்கவும் தயார்’ என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

கொங்கு மண்டலத்தில் ராகுல்காந்தி வருகின்ற 23ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சூழ்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டார் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி ராகுல் காந்தியின் வருகை குறித்த கேள்விக்கு , “கொங்கு மண்டலத்தில் ராகுல் காந்தியின் வருகை எழுச்சிகரமானதாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி அவர்கள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரையை விட 5 மடங்கு அதிக பிரச்சாரம் மேற்கொள்வார். கோவையில் தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். திருப்பூரில் தொழிலாளர்களோடு கலந்துரையாடி புதிய தொழிற்கொள்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறியவுள்ளார்” என தெரிவித்தார்.

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையிலான சலசலப்பு குறித்து பேசிய அவர், “கூட்டணிக்குள் எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் நண்பர்களோடு இணக்கமான சூழ்நிலையை விரும்புகிறோம். அதேவேளையில் தனியாக நிற்கவும் தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் எங்கள் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை. மதசார்பின்மையில் நம்பிக்கை உள்ள மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் எங்களோடு கூட்டணிக்கு வந்தால் வரவேற்கிறோம். தனித்து நின்று வாக்குகளை பிரிப்பதற்கு பதில் வலுவான எங்கள் கூட்டணியோடு நின்று தேர்தலை எதிர்கொள்ளலாம்” என்றார்.

“ரஜினிகாந்தை நாங்கள் காங்கிரஸிற்கு ஏற்கனவே அழைத்தோம் , ஆனால் பாஜகவினர் கொடுத்த அழுத்தம் அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்படும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டது. ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் காங்கிரஸிற்கு இருக்கிறது. அவர்கள் எங்களோடு அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம்” என்றார் கே.எஸ்.அழகிரி.

ராகுல்காந்தி பிரச்சார பயணமாகவே தமிழகம் வருவதாகவும் தேர்தல் தொடர்பான கூட்டணி உடன்பாடு இவையெல்லாம் குறித்து ஆலோசிக்க தேர்தல் சமயத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பார் எனவும் தெரிவித்தார். அண்டை நாடுகளில் கொரோனா தடுப்பூசியை அந்தந்த பிரதமர்கள் , அதிபர்கள் செலுத்தி பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் . அதுபோல இந்தியாவிலும் அதே நடைமுறையை பின்பற்றி பிரதமர் , மத்திய அமைச்சர்கள் செலுத்தியிருந்தால் பொது மக்களிடையே நிலவும் அச்சத்தை தவிர்த்து இருக்கலாம் எனவும் பேட்டியளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com