'நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருங்கள்!' - தமிழகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

'நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருங்கள்!' - தமிழகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
'நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருங்கள்!' - தமிழகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
Published on

வங்கக் கடலில் உருவாகும் நிவர் புயலை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கும்படி தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரப் பிரதேசத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், புயலாக உருவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வங்கக் கடலில் உருவாகியுள்ள தாழ்வு நிலையின் தற்போதைய நிலவரம் குறித்தும், இது புயலாக மாறி தமிழகம், புதுவை, ஆந்திர கடலோர பகுதிகளில் நவம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பாதிப்பை ஏற்படுத்தும் என இந்திய வானிலை துறையின் தலைமை இயக்குநர் விளக்கினார்.

இதில் கலந்துகொண்ட தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், புயலை எதிர்கொள்ள முழு அளவில் தயார்நிலையில் இருப்பதாக தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவிடம் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எப்) மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து, இந்தப் புயல் சவாலை எதிர்கொள்வோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் புயலால் உயிரிழப்பு எதுவும் ஏற்படக் கூடாது என்றும், பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சரவை செயலாளர் குறிப்பிட்டார். மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என்ற அறிவுறுத்தலை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்களுக்கு, நிலைமைக்கேற்ப தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மத்திய உள்துறை, மின்சாரம், தொலைதொடர்பு, விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் சுகாதார அமைச்சகத்தின் செயலாளர்கள், ரயில்வே வாரியத் தலைவர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், தேசிய பேரிடர் மீட்பு படை தலைமை இயக்குநர் மற்றும் பாதுகாப்பு அமைச்சக பிரதிநிதிகள் ஆகியோர், 3 மாநிலங்களுக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்வதாகவும், உதவிகளை அளிப்பதாகவும் தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவின் கூட்டத்தில் தெரிவித்ததாக மத்திய அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com