ஈரோடு மாவட்டத்தையடுத்த நசியனூர் மலைப்பாளையம் கீழ்பவானி வாய்காலில் கடந்த மாதம் (ஆகஸ்ட் 20ம் தேதி) உடைப்பு ஏற்பட்டு வாய்க்கால் நீர் கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் பாசனத்துக்காக செய்யப்பட்டிருந்த நீர் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. தற்போது வாய்க்கால் சீரமைப்பு பணி நிறைவு பெற்றதால் இன்று காலை முதல் மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
105 அடி நீர்மட்ட உயரம் கொண்ட பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்காலுக்கு ஆண்டுதோறும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 1,03,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆக. 15ம் தேதி அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் 1,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. 124 மைல் நீள்முள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 20ம் தேதி 55 வது மைலில் உள்ள நசியனூர் மலைப்பாளையம் வாய்கால்கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வாய்காலில் சென்ற 1000 கனஅடிநீர் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அன்றுதொடங்கி, கடந்த 20 நாள்களாக கீழ்பவானி வாய்காலில் கான்கிரீட் தளம் அமைத்து கரையை பலப்படுத்தும் பணி இரவு பகலாக நடைபெற்றது. 8 மீட்டர் உயரமும் 90 மீட்டர் நீளமும் உள்ள கான்கிரீட் கரைக்கான அந்தப்பணி தற்போது நிறைபெற்றுள்ளது. 20 நாள்களுக்கு பிறகு சோதனை ஓட்டமாக முதலில் 200 கனஅடி நீர் இன்று காலை திறந்துவிடப்பட்டது. இந்த நீரானது 5 நாள்கள் பயணித்து மலைப்பாளையம் வாய்க்காலை சென்றடையும்.
வாய்க்கரையில் கசிவு ஏற்படாமல் உறுதிதன்மையுடன் இருப்பதை பொதுப்பணித்துறையினர் உறுதி செய்தபிறகு வாய்க்காலில் திறந்தவிடப்பட்ட நீரானது படிப்படியாக உயர்ந்து 2,300 கனஅடியாக அதிகரிக்கும். கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவதால் நெல் நாற்றங்கால் தயாரிக்கும் பணி துவங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.