மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக மீண்டும் ரத்தினவேல் நியமிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழியை ஏற்றுக்கொண்டது தொடர்பாக கல்லூரியின் டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். உறுதிமொழி வாசித்த விவகாரத்தில், ரத்தினவேல் மீது எந்தத் தவறும் இல்லை என மாணவர்கள் தெரிவித்திருந்தனர். மாணவர்களிடமும் ரத்தினவேலிடமும் மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு நேரில் விசாரணை நடத்தியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
இதற்கு விளக்கமளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”மதுரை மருத்துவக்கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிவர். நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டதால் முதலமைச்சரின் உத்தரவுப்படி, ரத்தினவேல் மீண்டும் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுவிட்டார். எதிர்காலத்தில் எவ்வாறு பணியாற்றுவது என்பது தொடர்பாக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது” என்று பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.