ராசிபுரம் அருகே அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மின்சாரம் தாக்கி காளை உயிரிழப்பு. தகவல் அறிந்து வந்த போலீசார் ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அருகே உள்ள ராமநாதபுரம் பகுதியில் இன்று காலை 8 மணிக்கு அனுமதி இன்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, ஆயில்பட்டி, தம்மம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளையர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து வாடிவாசலில் இருந்து துள்ளிவரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது காளை ஒன்று அருகிலுள்ள செல்வம் என்பவரது விவசாய நிலத்திற்குள் சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து விவசாய நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் சிக்கிய காளை மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிழந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்களபுரம் காவல் துறையினர் அனுமதி இன்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச் செல்வனிடம் கேட்ட போது... ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக தகவல் வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்தி விட்டனர். காளை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை செய்து, அனுமதியின்றி போட்டி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.