2ஜி Vs ஜெ. வழக்கு தீர்ப்புகள்: 'எது உண்மை, எது பொய்?' - ஆ.ராசா நகல்களுடன் ஆவேசம்!

2ஜி Vs ஜெ. வழக்கு தீர்ப்புகள்: 'எது உண்மை, எது பொய்?' - ஆ.ராசா நகல்களுடன் ஆவேசம்!
2ஜி Vs ஜெ. வழக்கு தீர்ப்புகள்: 'எது உண்மை, எது பொய்?' - ஆ.ராசா நகல்களுடன் ஆவேசம்!
Published on

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு விவரங்களை மறைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவினரும் பொய் கூறி வருவதாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.-யுமான  ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, “மக்களுக்கும் ஊடகங்களுக்கும் புரிதல் ஏற்பட முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை தற்போது வழங்குகிறேன். எது உண்மை, எது பொய் என்று ஆதாரங்களுடன் விளக்கமளிக்கத் தயார். கோட்டையில் இதுகுறித்து விவாதிக்க தயார் என கூறினேன். ஆனால் இன்றுவரை பதில் இல்லை.

2 ஜி வழக்கில் குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபிக்கவில்லை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 2ஜி வழக்கு தொடர்பாக முதல்வர் தனது தகுதியை மறந்து மிக மோசமாக விமர்சித்துள்ளார். வதந்தி, ஊகம், கிசுகிசு என்பதுதான் 2ஜி வழக்கு என நீதிபதிகள் கூறியுள்ளனர். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு விவரங்களை மறைத்து முதல்வரும் அதிமுகவினரும் பொய் கூறி வருகின்றனர்.

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்கிய பின் நீதிபதிகள் 5 பக்கங்கள் தனியாக சொத்து குவித்த விவரங்களை மனவேதனையுடன் தெரிவித்துள்ளனர். அதில் ‘மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து, அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் இத்தகைய சுயநலம் கொண்டவர்களின் நடத்தை அரசியல் சட்டத்தின்மீது அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறுவதாகும். அரசியலமைப்பு சட்டத்தின் புனிதத்தை களங்கப்படுத்துவதாகவும் உள்ளது’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். யார் உறுதிமொழி எடுத்துக்கொண்டது? ஜெயலலிதாதான் உறுதிமொழி எடுத்துக்கொண்டது.

இறந்துபோனவரை பற்றி பேசலாமா என கேட்கின்றனர். நான் அநாகரீகமாக பேசவில்லை. ஜெயலலிதாவை பற்றி அநாகரீகமாக பேசவில்லை. யார் தவறு செய்தாலும், அதை எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த முறையில்தான் நான் பேசினேன்” என்றார் ஆ.ராசா.

முன்னதாக, ஆ.ராசா 2 ஜி வழக்கை மறைத்து சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பி வருகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அதிமுகவினரும் குற்றம்சாட்டினர். ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுகவினர் பல்வேறு போராட்டமும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com