பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தமிழகத்தில்தான் குறைவு என்று சென்னை போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ஆலோசனை கூட்டத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட Kavalan SOS செல்போன் செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பங்கேற்று மருத்துவக்கல்லூரி மாணவிகள், அரசு செவிலியர்களுக்கு காவலன் SoS செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது அவர், “காவலன் செயலி பெண்கள் பாதுகாப்பிற்கான செயலி. மிகச் சிறந்த ஒரு செயலி. விழிப்புணர்வு குறைவால் குறைவான நபர்களே அதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வை சென்னை காவல்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். 5-ம்தேதி முதல் 9-ம்தேதி வரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இது இன்னும் பல மடங்கு உயர வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறைவாக உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை. பெண்களுக்கு எதிரான மிக முக்கியமான குற்றமாக நகைபறிப்பு சம்பவம் உள்ளது. அது சென்னையில் 50 சதவீதம் குறைந்துள்ளது” என்றார்.