செய்தியாளர் : ச.குமரவேல் - வேலூர்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ராமபாளையம் பகுதியை சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்த ஏழு குடும்பத்தினருக்கு ஒரு குடும்பத்திற்கு தலா பத்தாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் அப்பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்பவர். இதையடுத்து அவரது செங்கல் சூளைக்கு வேலைக்கு அழைத்துச் சென்று 24 மணி நேரமும் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கியதோடு, அவர்கள் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் பணத்திற்கு வட்டி மேல் வட்டி போட்டு தற்போது ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளையும் செங்கல் சூளையில் வேலைக்கு பயன்படுத்துவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், அவரது செங்கல் சூளையிலேயே கொத்தடிமைகளாக வேலை செய்ய வேண்டும் எனவும் வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்ட இருளர் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக கடந்த சனிகிழமை, ராணிப்பேட்டை கோட்டாட்சியர் செங்கல் சூலை உரிமையாளர் கிருபாகரன் மற்றும் பாதிக்கப்பட்ட ஏழு குடும்பத்தினரை வரவழைத்து விசாரணை செய்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு எந்த ஒரு தொந்தரவும் தரக்கூடாது என கிருபாகரனை எச்சரிக்கை செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும் கிருபாகரன் ஏழு குடும்பத்தினரையும் தொடர்ந்து மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொத்தடிமைகளாக தங்களை நடத்தும் கிருபாகரன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் தங்களை பிரபாகரனின் செங்கல் சூளையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஏழு குடும்பத்தினரும் தங்களது பிள்ளைகளுடன் கோரிக்கை மனுவினை அளித்தனர்.