செய்தியாளர்: சரத்குமார்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பெருங்காஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் என்பவரது மகன் கதிர்வேல் (18). இவர் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன விளையாடச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து நேற்று மாலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் கதிர்வேல் அணிந்திருந்த செருப்பு மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கதிர்வேலின் உறவினர்கள் சோளிங்கர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் கிடந்த கதிர்வேல சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கதிர்வேல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியது. மேலும் கதிர்வேல் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சார்ந்த சிறுமியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கதிர்வேலின் சாவுக்கு சிறுமியின் தந்தை தான் காரணம் என கருதிய கதிர்வேலின் உறவினர்கள் சிறுமியின் வீட்டுக்குச் சென்றனர்.
இதனால் பயந்து போன சிறுமியின் பெற்றோர் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர். ஆனாலும் சிறுமியின் வீட்டை சரமாரியாக தாக்கியுள்ளனர். இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது சிறுமியின் தந்தை தாக்க வந்தவர்களை நோக்கி கத்தியை வீசியுள்ளார். இதில் கதிர்வேல் தரப்பைச் சேர்ந்த மணிகண்டன், வல்லரசு ஆகிய இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராணிப்பேட்டை எஸ்பி கிரன் ஸ்ருதி, ஏடிஎஸ்பி குமார், அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இச்சம்பவத்தால் பெருங்காஞ்சி கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக பெருங்காஞ்சி கிராமத்தில் இன்ஸ்பெக்டர்கள் பாரதி, லட்சுமிபதி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.