ராமேஸ்வரம் கோயில் நகைகள் திருட்டா? தேய்மானமா?: திடுக்கிடும் பின்னணி என்ன?

ராமேஸ்வரம் கோயில் நகைகள் திருட்டா? தேய்மானமா?: திடுக்கிடும் பின்னணி என்ன?
ராமேஸ்வரம் கோயில் நகைகள் திருட்டா? தேய்மானமா?: திடுக்கிடும் பின்னணி என்ன?
Published on

ராமேஸ்வரம் கோயில் நகைகள் எடை குறைவு சம்பந்தமான சர்ச்சையில், அதிகாரி ஒருவர்  பயன்பாட்டில் இருக்கும் பொருட்கள் சேதம் அடைவதும், தேய்மானம் அடைவதும் இயல்புதான் எனக் கூறியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ராமநாதசுவாமி திருக்கோயில். இக்கோயிலுக்குச் சொந்தமாக தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம்,செம்பு உள்ளிட்ட 350 க்கும் மேற்பட்ட விலைமதிப்புமிக்க உடைமைகள் உள்ளன. இந்த உடைமைகள் அனைத்தும் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி சிவராத்திரி, ஆடி திருக்கல்யாணம், நவராத்திரி விழா உள்ளிட்ட விழா நாட்களிலும், அம்பாள் வீதி உலா மற்றும் இதர பூஜைகளுக்கும் இந்த ஆபரணங்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம். கருவூலத்திலிருந்து கோயில் இணை ஆணையர் ஊழியர்கள் மற்றும் குருக்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் இந்தப்பொருட்கள் பின்னர் பாதுகாப்பாக அறைக்குள் வைக்கப்படும்.

இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு நகை மதிப்பிட்டாளர் குழு கோயிலின் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்துள்ளது. இந்த ஆய்வின்போது கோயிலில் தெய்வத்திற்கு அணிவிக்கப்படும் பல வகையான நகைகளின் எடை குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்தான விளக்கத்தை அளிக்குமாறு பணியாளர்கள் குருக்கள் மற்றும் ஓய்வு பெற்ற குருக்கள் உள்ளிட்ட 30 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதுடன் அதற்கான விளக்கத்தை முறையாக தராதபட்சத்தில் அதற்கான மதிப்பீட்டுத்தொகை வசூல் செய்யப்படுவதுடன் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்தான விளக்கத்தைக் கேட்க திருக்கோவில் இணை ஆணையரை தொடர்பு கொண்டோம். ஆனால் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. இதனைத் தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் தொடர்பான அதிகாரி ஒருவரிடம்  புகார் குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது “ தமிழ்நாடு முழுவதும் இந்து அற நிலையத்துறைக்குச் சொந்தமான திருக்கோயில்களில் தங்கம் ,வெள்ளி, செம்பு, சில்வர், உள்ளிட்ட பொருள்களின் மதிப்பீடு கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நகை மதிப்பீட்டு அதிகாரிகளால் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அறிக்கை தற்போது வந்துள்ளது. அதில் வெள்ளி தட்டு, கும்பாலம், மணி , சர விளக்குகள், ஊஞ்சல், தேர், உள்ளிட்ட வெள்ளியால் ஆன பொருட்கள் மற்றும் தங்க கவசம், கிரீடம், தேர், ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள், தங்கம் வெள்ளியால் ஆன சாமி அம்பாள் வீதி உலா வாகனங்கள், சாமி ஆராதனை உள்ளிட்ட தங்கத்தால் ஆன பொருள்களின் எடை குறைவாக உள்ளது தெரியவந்தது.

எடை குறைவுக்குண்டான முறையான காரணம் குறித்து கோயில் நிர்வாகம் தகுந்த விளக்கம் அளிக்கும் படி மதிப்பீட்டாளர்கள் குழு உத்தரவிட்டுள்ளது. அதற்கு கோயில் நிர்வாகம் சார்பில், சராசரி வருடத்தில் நடத்தப்படும் பூஜைகள், வரவேற்பு வைபங்கள் உள்ளிட்ட விழாக்களின் போது தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் எந்த வகைகளில், எத்தனை முறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்தான காரணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மதிப்பீடு சோதனை நடந்துள்ளது. இன்னொரு விஷயம் முன்பு பணியில் இருந்த பெரும்பாலான குருக்கள், ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது புதிய அலுவலர்கள் பணியில் உள்ளனர். பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் பொருட்கள் சேதம் அடைவதும், தேய்மானம் அடைவதும் இயல்புதான். ஆகவே முறையான விளக்கம் வந்தவுடன் மதிப்பீட்டுக் குழுவிற்கு அது குறித்தான விளக்கம் அனுப்பப்படுவது நடைமுறை. அதே நடைமுறை தற்போதும் செயல்படுத்தப்படும்” என்றார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சிவராஜன் என்ற புரோகிதர் ராமேஸ்வரம் திருக்கோயிலில் இராமர் லட்சுமணர் உள்ளிட்ட ஐம்பொன்னாலான விலை மதிக்கத்தக்க பழமையான விக்ரகங்கள் திருடு போய் உள்ளதாக காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அவர் கூறும் போது “ இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் வரை சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில் இருந்து வருகிறது. கடந்த 2016 ல் நகைகள், தங்க விக்ரகங்களில் உள்ள பொருட்களின் எடை குறைவு மற்றும் அசலுக்கு மாற்றாக போலியான நகைகள் வைக்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் .

வழக்கு விசாரணை கடந்த மார்ச், அல்லது ஏப்ரல் மாதத்தில் வரவேண்டிய நிலையில் கொரோனா தொற்று பிரச்னையால் காலதாமதமாகி உள்ளது. 1985க்கு பிறகு திருக்கோயில்களில் நகைமதீப்பீட்டாளர்கள் பணி நியமனம் இல்லை என்ற காரணத்தால் 10 வருடங்களுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யவேண்டும் என்பது நடைமுறையில் இல்லாமல் உள்ளது. இவர்கள் குறிப்பிடும் வகையிலான தங்கம் என்பது ஆயிரம் பாரன்ஹீட் வெப்பத்தில் உருகும் தன்மை கொண்டது. 50 வருடம் பயன்பாட்டில் இருக்கும் தங்கத்தின் ஒரு கிராமுக்கான தேய்மானம் என்பது 0.1 சதவிதம். ஆகவே அதிகாரிகளின் தவறை மறைக்க குருக்கள்களை பழிசொல்கின்றனர் . தமிழகத்தில் எந்த திருக்கோயில்களிலும் நகை மதிப்பீடு நடத்தப்படவில்லை. ராமேஸ்வரம் கோயிலில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது ஆகவே வழக்கு விசாரணைக்கு வரும்போது குற்றம் வெளிப்படும்” என்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com