செய்தியாளர்: அ.ஆனந்தன்
கோடை விடுமுறை மற்றும் வைகாசி அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்.
வரும் திங்கட்கிழமை கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்க இருப்பதால் இன்று ராமேஸ்வரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், யாத்திரியர்களும் குவியத் தொடங்கியுள்ளனர். இவர்கள் இன்று காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடச் சென்றனர்.
அப்பொழுது கடல் சுமார் 150 மீட்டருக்கும் அதிகமான தொலைவிற்கு உள்வாங்கியதால் பக்தர்களிடையே ஒரு வித அச்சம் நிலவியது. கடல் உள்வாங்கியதால் ராட்சத பாறைகள், பவளப்பாறைகள் சங்கு முள் உள்ளிட்டவைகள் வெளியே தெரிந்தன.
இருப்பினும் அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராட வேண்டும் என்ற ஐதீகத்தால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி நடந்து சென்று தீர்த்தத்தில் குளித்தனர். திடீரென ஏற்பட்ட இந்த நிகழ்வு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஓலைக்குடா, சங்குமால், தெற்கு கரையூர் மற்றும் பாம்பன் தெற்குவாடி சின்னப்பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் உள்வாங்கியுள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கரையோர மீன்பிடி தொழில் செய்துவரும் பாரம்பரிய மீனவர்கள் இன்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.