கடந்த ஒருவார காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், கடல் சீற்றம் காரணமாக இன்றும் கடலுக்குச் செல்லவில்லை.
உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு கடலில் மூழ்கிப்போன படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9ஆம் தேதி முதல் நேற்று வரை ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டம் முடிந்து இன்று, மீனவர்கள் தொழிலுக்குச் செல்வதற்காக ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், கடல் சீற்றத்தால் மீன் பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டதால், படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு மீனவர்கள் வீடு திரும்பினர்.