இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரையும், அவர்களது 5 படகுகளையும் கடந்த 21ஆம் தேதி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இதேபோல், கடந்த பிப்ரவரி மாதம் 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மீன்பிடித்தொழிலை சார்ந்துள்ள கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.
மீனவர்களின் வேலை நிறுத்ததால் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வரும் 8ஆம் தேதி ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ஆதார் உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்த மீனவர்கள், தேர்தலுக்குள் மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் எச்சரித்தனர்.