செய்தியாளர் அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை சிங்கி வலைகுச்சு மீனவ கிராமத்திற்கு கடந்த வியாழக்கிழமை அதிகாலை இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றம் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த பைபர் படகு ஒன்றை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த படகில் இருந்த மூவரில் ஒருவர் கடலில் குதித்து தப்பித்த நிலையில் இருவரை கடலோர காவல் படை வீரர்கள் பிடிக்க முயன்றபோது அவர்கள் கடலில் பார்சல் ஒன்றை வீசியுள்ளனர். இதனையடுத்து படகுடன் இருவரை பிடித்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சலை கடலில் வீசியதாகவும் அதில் சுமார் 10 கிலோ தங்கம் இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக ஸ்ஃகூபா வீரர்களைக் கொண்டு கடல் பகுதியில் தொடர்ந்து தேடி வந்த நிலையில் தங்கம் கிடைக்காததால் நான்காவது நாளாக நேற்று மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், பிடிபட்ட இரண்டு நபர்களையும் படகில் அழைத்துச் சென்று ஸ்ஃகூபா வீரர்கள் மற்றும் முத்து குளிக்கும் மீனவர்களை கொண்டு கடலுக்கு அடியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கடத்தல் தங்கத்தை தொடர்ந்து தேடியும் எந்தவித தடயமும் கிடைக்காததால் தப்பியோடியவர் தங்கத்தை எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் பிடிபட்ட இரண்டு பேரிடம் விசாரணையை துவக்கி உள்ளனர்.