செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரும் உதவி ஆசிரியரும் பணியாற்றி வரும் நிலையில், மொத்தம் ஐந்து வகுப்புகள் உள்ளன. இதில், தற்போது ஒன்றாம் வகுப்பில் ஒரே ஒரு மாணவி மட்டுமே பள்ளியில் சேர்ந்துள்ளார். மற்ற வகுப்புகளில் மாணவர்கள் யாரும் சேர முன்வரவில்லை.
இந்நிலையில், அந்த ஒரே ஒரு மாணவிக்கு பாடம் நடத்துவதற்கு, தலைமையாசிரியர் ஒருவரும், உதவி ஆசிரியர் ஒருவரும் உள்ளனர். அதிலும் தலைமையாசிரியர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ள நிலையில், உதவி ஆசிரியர் அந்த ஒரே ஒரு மாணவிக்கு பாடம் நடத்தி வருகிறார். இந்த மாணவிக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு கேள்விக் குறியாக உள்ளது.
இது பற்றி அதிகாரிகளிடம் விசாரித்த போது, “இந்த கிராமத்தில் வசித்துவந்த மக்களில் அதிகம் பேர் வெளியூர் சென்று விட்டார்கள். ஊரில் மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ளது. அதனாலேயே மாணவர் சேர்க்கையும் குறைவாக உள்ளது” என்று தெரிவித்தனர்.