ரத யாத்திரை வாகனத்தால் புதிய சர்ச்சை.. !

ரத யாத்திரை வாகனத்தால் புதிய சர்ச்சை.. !
ரத யாத்திரை வாகனத்தால் புதிய சர்ச்சை.. !
Published on

ரத யாத்திரை தமிழகம் வருவதற்கு பல்வேறு கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ரத யாத்திரையின் வாகனத்தால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் துவங்கிய ராம ரத யாத்திரை நாடு முழுவதும் 6,000 கி.மீ தொலைவு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களைக் கடந்து, கேரளாவிலிருந்து புனலூர் வழியாக தமிழகத்திற்கு வருவதாக இருந்தது. ஆனால் ரத யாத்திரை தமிழகம் வருவதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. ஆனால் எதிர்ப்பையும் மீறி ரத யாத்திரை கடந்த 20ம் தேதி தமிழகம் வந்தடைந்தது. தற்போது ரதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு நேற்றிரவு வந்த ராமராஜ்ய ரதத்திற்கு, வில்லுக்குறி பகுதியில் பக்தர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். நேற்றிரவு நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டிருந்த ரதம், இன்று காலை தக்கலை, சாமியார்மடம், உண்ணாமலைக்கடை, குழித்துறை வழியாக திருவனந்தபுரம் செல்கிறது.

இதனிடையே கோயில் மாதிரியை போல கனரக வாகனத்தை மா‌ற்றி அமைப்பதற்கு மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்ட வாகனத்தின் வடிவமைப்பை மாற்ற முடியும் என்றும் நகரும் கோயில் போன்ற வடிவமைப்பில் வாகனங்களை ‌உருவாக்குவதற்கு அனுமதி இல்லை என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே மோட்டார் வாகன விதி 207 இன் கீழ் அந்த வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்யலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகனத்தின் அசல் வடிவமைப்பை கோயில் போல மாற்றுவதற்கு காப்பீடு மற்றும் தகுதி சான்றிதழ் வாங்குவதும் அவசியம் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அதற்கான அனுமதியையும் ரத யாத்திரை ஏற்பாட்டாளர்கள் வாங்கியதாக தெரியவில்லை என கூறுகின்றனர். வாகனத்தின் உருவத்தை மாற்றினாலும், அதன் நம்பர் பிளேட் முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் நன்கு தெரியும் வகையில் பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com