ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுவிக்கக்கோரி, பிரதமர் மோடிக்கு மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர்களில் ஒருவர்தான் ரவிச்சந்திரன். இவர் இவ்வழக்கில், சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மதுரை சிறையில் உள்ள அவர், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் மூலமாக இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில், 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு சம்மதம் தரும்படி ஆளுநரை வலியுறுத்த கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன், 28 ஆண்டுகளாக 7 பேரும் சிறையில் வாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் முதல்வர் கொலை வழக்கில் கைதானவரின் தண்டனையை குறைக்கும் முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ள ரவிச்சந்திரன், 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதையும் வரவேற்பதாக கூறியுள்ளார்.
கடந்தாண்டு 7 தமிழர்களை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு நிராகரித்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களில் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் இரட்டை நிலைப்பாடு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் நேரடியாக தலையிட்டு 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் சம்மதம் தெரிவிக்க ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.