முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் வெறும் பரிந்துரை மட்டுமே என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சுமார் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநருக்கு அனுப்பியது. இந்தத் தீர்மானம் மீது இதுவரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும், விடுதலை செய்ய வேண்டும் எனவும் நளினி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பைய்யா, பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், நியாயமற்ற முறையில் 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும் நளினி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் என்பது பரிந்துரை மட்டுமே என்றும், இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நளினி சட்டப்பூர்வ காவலில் இருக்கிறாரா? அல்லது சட்டவிரோத காவலில் இருக்கிறாரா? என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.