“மோடி, அமித்ஷாவுடன் குருமார்கள் பேச்சுவார்த்தை நடத்த உதவுவேன்” : ரஜினிகாந்த்

“மோடி, அமித்ஷாவுடன் குருமார்கள் பேச்சுவார்த்தை நடத்த உதவுவேன்” : ரஜினிகாந்த்
“மோடி, அமித்ஷாவுடன் குருமார்கள் பேச்சுவார்த்தை நடத்த உதவுவேன்” : ரஜினிகாந்த்
Published on

சிஏஏ, என்பிஆர் விவகாரத்தில் மோடி, அமித்ஷாவுடன் குருமார்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகேவேந்திரா மண்டபத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்பட்டன.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், மதகுருமார்கள் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “அது ஒரு இனிமையான சந்திப்பு. நாட்டில் சகோதரத்துவம், அன்பு, அமைதி நிலவ வேண்டும் என்று கூறினார்கள். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். நானும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகத் தெரிவித்தேன்.

சிஏஏ, என்பிஆர் விவகாரங்கள் குறித்து மதகுருமார்கள்(அரசியல்வாதிகள் அல்ல) தங்களுக்குள் கலந்து ஆலோசித்து பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுதான் சரியானதாக இருக்கும். அதற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என அவர்களிடம் தெரிவித்தேன்” எனக் கூறினார்.

மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை பற்றி கூறும்போது, “கட்சி அறிவிப்பு தேதி குறித்து ஆலோசித்தேன். நிறைய கேள்விகள் அவர்களிடம் இருந்தது. அதற்கு பதில் அளித்தேன். நிறைய விஷயங்களை பரிமாறிக் கொண்டோம். அவர்களுக்கு மிக திருப்திகராமாக இருந்தது.

ஆனால் எனக்கு ஒருவிஷயத்தில் திருப்தி கிடையாது. ஏமாற்றம்தான். அதை இப்போது சொல்ல விரும்பவில்லை. உள்ளே பேசியதை வெளியே சொல்ல முடியாது. நேரம் வரும்போது சொல்வேன்” எனவும் ரஜினி குறிப்பிட்டார்.

மேலும், கமல்ஹாசனுடன் இணைந்து தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்புவீர்களா என்ற கேள்விக்கு, நேரம்தான் பதில் சொல்லும் என பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com