ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்களாக தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100வது நாள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு, 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, பல அரசியல் தலைவர்களும் ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும் என குரல் கொடுத்தனர். இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சீல் வைத்தார். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக நோட்டீஸும், ஆலையின் கதவில் ஒட்டப்பட்டது.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடியோ வெளியிட்டுள்ள ரஜினி, “இந்த வெற்றி போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்களின் ரத்தம் குடித்த இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.