கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மாலையில் அலை அலையாய் மக்கள் வந்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், கருணாநிதி இறுதி அஞ்சலி நாள் அன்று இருந்த தனது மனநிலையை பகிர்ந்துகொண்டார். அதில், “கலைஞர் இறந்த செய்தி கேட்டதும் என்னால் தாங்க முடியவில்லை. அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு இரவிலேயே சென்றேன். அந்தச் சிறிய வீட்டில், பெரிய பெரிய விஐபிக்கள் கூட்டமே இருந்தது. அங்கே இருந்த கூட்டத்தில் அவரை என்னால் பார்க்கமுடியவில்லை. அழுதுவிட்டு வந்துவிட்டேன்.
பின்னர் காலையிலேயே கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கத்திற்கு சென்றேன். அங்கே அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிப்பார்த்தேன். பெரிய அளவில் கூட்டமே இல்லை. என்னாடா இது, தமிழக மக்களுக்கு எத்தனையோ செய்த தலைவரை காண மக்கள் வரவில்லையே என நினைத்தேன். தமிழக மக்கள் மீது கோபம் வந்துவிட்டது. அப்படியே வீட்டிற்கு சென்று, யூடியூப்பில் கலைஞரின் குரலை கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டேன். மாலையில் எழுந்து டிவி பார்த்தபோது, அலை அலையாய் கூட்டம் வந்திருந்தது. அழுதுவிட்டேன். என்ன இருந்தாலும், தமிழர்கள் தமிழர்கள் தானே” என்று கூறினார்.