நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்த நிலையில் அவரது உடல் முதலில் சாலிகிராமத்தில் இருந்த அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது.
இட நெருக்கடி காரணமாக சென்னை ராஜாஜி அரங்கில் அவரது உடல் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று அதிகாலை தீவுத்திடலுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. தொடர்ச்சியாக தொண்டர்களும், ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் நேரில் சென்று விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தீவுத்திடலுக்கு சென்று விஜயகாந்திற்கு இறுதிமரியாதை செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் சண்முகப்பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “கன்னியாகுமரி படப்பிடிப்பில் இருந்து நேற்றே வருவதாக இருந்தது. மனது ரொம்ப கஷ்டமாக இருந்தது. விஜயகாந்தைப் பற்றி பேசவேண்டும் என சொன்னால், நட்பிற்கு இலக்கணம் விஜயகாந்த். ஒருமுறை அவருடன் பழகி விட்டால் வாழ்நாள் பூராவும் அதை மறக்க முடியாது. அவரது அன்புக்கு அடிமை ஆகிவிடுவார்கள். அதனால்தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரைக் கொடுக்க தயாராக இருந்தார்கள்,, இருக்கிறார்கள். நண்பர்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மீதும் கோபப்படுவார். ஆனால் யாருக்கும் அவர்மீது கோபம் வராது. விஜயகாந்தின் கோபத்திற்கு பின்னால் நியாயமான காரணம் இருக்கும். சுயநலம் இருக்காது, அன்பு இருக்கும். அவர் தைரியத்திற்கும் வீரத்திற்கும் இலக்கணமானவர். அவருடன் பழகிய அனைவருக்கும் அவரைப் பற்றி சொல்வதற்கு எவ்வளவோ நினைவிருக்கும்.
எனக்கும் அவரைப்பற்றிய நினைவுகள் எவ்வளவோ உள்ளது. நான் உடல் சரியில்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் நான் இருக்கும் போது, ரசிகர்கள், ஊடகங்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. கட்டுப்படுத்தவே முடியவில்லை. விஜயகாந்த் அங்கு வந்து 5 நிமிடங்களில் அங்கிருந்த எல்லோரையும் போகச்சொல்லி அதை சரிபடுத்தி விட்டு, எனது அறை பக்கத்திலேயே தனக்கும் அறைகேட்டு யார் வருகிறார்களோ நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லியுள்ளார்.
சிங்கப்பூர் மலேசியா நடிகர் சங்க நிகழ்ச்சிக்காக செல்லும்போது, நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் பேருந்தில் ஏறிவிட்டார்கள். நான் வருவதற்கு சற்று நேரமானது. ரசிகர்கள் அதிகமானோர் சூழ்ந்துவிட்டனர். பவுன்சர் கூட யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவர் பேருந்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். 2 நிமிடங்களில் அனைவரையும் விரட்டி பாதை உருவாக்கி பூ போல் கொண்டு வந்தார்.
அந்தமாதிரியான ஒரு ஆளை கடைசி நாளில் இப்படி பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. கேப்டன் அவருக்கு மிக பொருத்தமான பெயர். 71 பந்துகளில் பல பவுண்டரிகள் பல சிக்ஸர்கள். நூற்றுக்கணக்கான ரன்களை குவித்து மக்களை மகிழ்வித்து தனது விக்கெட்டை இழந்து இந்த உலகம் எனும் ஃபீல்டை விட்டு சென்றுவிட்டார். வாழ்க விஜயகாந்த் நாமம்” என தெரிவித்தார்.