தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என ரஜினி, விசாரணை ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் சினிமா உச்சபட்ச அந்தஸ்தில் இருக்கும் நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும்போது ரசிகர்கள் அதிகளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னை வந்துவிடலாம் எனக்கூறி விலக்கு கேட்டுள்ளார். அதேசமயம், தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயார் எனவும் ரஜினி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம், வரும் 25-ஆம் தேதி விசாரணைக்கு ரஜினி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி 2018-ம் ஆண்டு மே 22-ம் நாள் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்திருந்தது.