75 ஆண்டுகளுக்குப் பின் போதமலைக்கு சாலை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓராண்டில் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி துவங்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் நாமக்கல்லில் பேட்டியளித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ராஜேஷ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த போதமலை கிராமத்திற்கு இன்னும் சாலை வசதி இல்லை. இந்நிலையில், தற்போது சாலை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதில் வழங்கியுள்ளது.
இதன் கீழ் போதமலை கீழூரில் இருந்து மேலூருக்கு 5.96 ஹெக்டர் வனப்பகுதியும், புதுப்பட்டியில் இருந்து கெடமலைக்கு 2.71 வனப்பகுதியும் என சுமார் 8 ஹெக்டர் பரப்பில் 34 கிலோமீட்டர் சாலை அமைக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த சாலை ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும்.
மேலும், கொல்லிமலையில் பல்வேறு இடங்களில் இணையதள சேவை சரிவர கிடைக்காத நிலையில், அங்கு வாழும் மலைவாழ் மக்கள் பெரும்சிரமத்திற்கு ஆளாகி வருகிண்றனர். இதனை போக்கும் வகையில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5.70 கோடி ரூபாய் மதிப்பில் இணையதள சேவை விரிவாக்கம் முன்மொழிவு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகளும் துவங்கப்படும்.
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இணை மின் உற்பத்தி திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. தற்போது மீண்டும் பணிகள் துவக்கப்பட்டு 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு இன்னும் ஓராண்டிற்குள் மின் உற்பத்தி துவங்கப்படும்” எனத் தெரிவித்தார்.