"ஆன்மிக அரசியலைத்தான் அதிமுக நடத்தி வருகிறது" என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “எங்களிடம் தர்மம் இருக்கிறது. அதனால் நாங்கள் உரக்கப் பேசுகிறோம். எங்களிடம் பேசவரவில்லை என்றால், உங்களிடம் தப்பு இருக்கிறது. 2 ஜி வழக்கில் நீங்க குற்றவாளியா இல்லையா? முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தானே பிடித்து சிறையில் வைத்தார். ஸ்பெக்ட்ரம் ராசா என்பதுதான் அவர் பெயர்.
நாங்கள் ஆன்மிக அரசியலைத்தான் வழிநடத்தி வருகிறோம். ஆன்மிகம் என்பது ஒரு மதம் சார்ந்தது கிடையாது. இறைவன் சார்ந்தது. மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம். சிலைகள் வெவ்வேறாக இருக்கலாம். எம்மதமும் எங்களுக்கு சம்மதம். இந்த கட்சி, ஆன்மிக கட்சி. இந்த ஆட்சி ஆன்மிக ஆட்சி.
தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சி எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஆட்சிதான். அதில் சில ரஜினிக்கு பிடித்திருக்கலாம். அதனால் அவர், அவர்களை முன்னிறுத்தி பேசியிருக்கலாம். மறைந்த தலைவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். அதில் தவறு ஒன்றும் கிடையாது.
திமுக கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. ஒரு பேப்பர் இல்லாமல் ஸ்டாலினை ஒரு திருக்குறள் கூறச் சொல்லுங்கள். பின்னர் அவர் சொல்வதையெல்லாம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி ஆ.ராசா, ராஜேந்திர பாலாஜி ஒரு ஜோக்கர் என்றும், அவரிடம் பேச முடியாது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.