ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அந்த வழக்கில் இன்று அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென கடந்த 28-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் தான் சிகிச்சை எடுத்து வருவதாகவும், அதனால் இன்று தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாதென்றும் கூறி, தன் மீதான விசாரணையை ஒத்திவைக்க குற்றப்பிரிவுக்கு இன்று கடிதம் அளித்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.
தனது அக்கடிதத்தில், “எனக்கு கடந்த 23ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் நான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். மீண்டும் தற்போது கொரோனா பரிசோதனை செய்து உள்ளேன். அதன் முடிவில் தொற்று இல்லை என்று சான்று வந்ததும் நான் விசாரணைக்கு ஆஜராகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர். முன்னதாக ஆவின் முறைகேடு வழக்கில் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் 4 வார கால நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற நிபந்தனையின்படியே விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜேந்திர பாலாஜி 31ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த சம்மன், கடந்த 28ம் தேதி அவருக்கு அனுப்பப்பட்டிருந்தது. சம்மனை பெற்றுக் கொண்ட ராஜேந்திர பாலாஜி, இன்று காலை 10 மணிக்கு தனது வழக்கறிஞர்களுடன் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போதுதான் மேற்சொன்னதுபோல அவர் தனக்கு கொரோனா ஏற்பட்டது, தொற்று இல்லை என்று சான்று வந்ததும் விசாரணைக்கு ஆஜராகிறேன் என்றும் கடிதம் அளித்தார். இதற்காக இன்று நேரில் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்த அவர், காரில் அமர்ந்தபடியே இருந்து கடிதம் அளித்துவிட்டு, பின்னர் தனது வழக்கறிஞர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
கடிதத்தை ஏற்றுக்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், “கொரோனா பரிசோதனையில் ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா தொற்று இல்லை என சான்று வந்தவுடன், மீண்டும் சம்மன் அனுப்பி அவரை விசாரணைக்கு அழைக்க இருக்கிறோம்” என தெரிவித்தனர்.