இன்று காலை நடைப்பெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் தனது உரையை 2 நிமிடங்களிலேயே முடித்துவிட்டு அவையை விட்டு வெளியேறினார். இந்நிலையில் ஆளுநர் வெளியேறிய காரணம் என்ன என்பது குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து தற்போது அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், “9.2.2024 அன்றே ஆளுநரின் சட்டமன்ற உரை ராஜ்பவனை வந்தடைந்தது. அதில் உண்மைக்கு புறம்பான சில தகவல்கள் இடம்பெற்றிருந்தன. ஆகவே சில கருத்துகளை குறிப்பிட்டு நீக்க கோரப்பட்டது. இதில்,
1) தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆளுநர் உறையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இயற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சருக்கும் சபாநாயகருக்கும் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
2) ஆளுநரின் உரையில் அரசாங்கத்தின் சாதனைகள், கொள்கைகள் போன்றவை அரசியல் பார்வையோடு எழுதப்பட்டிருந்தன.
இது போன்ற கருத்துகள் அனைத்தும் மாற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் ஆளுநர் கூறிய ஆலோசனைகளை அரசு புறக்கணித்தது. மேலும் சபாநாயகர் உரை நிகழ்த்தியபோது கோட்சேயின் வழி வந்தவர் கவர்னர் என்று கூறியுள்ளார். இப்படி சபாநாயகர் கூறி, அவையில் தனது கண்ணியத்தினை இழந்துவிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால்தான் அவையின் மாண்பு கருதி அங்கிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.