மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 14 பேர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தனர்.
சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8984ஆக உள்ளது. இதில் 5965 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 2836 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரானாவிலிருந்து குணமானவர்கள் பிளாஸ்மா தானம் அளிப்பதன் மூலம், கொரோனா நோயாளிகளை குணமாக்க முடியும் என்பதோடு, ஒரு நபர் பிளாஸ்மா தானம் அளிப்பதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளை காப்பாற்ற முடியும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக இராஜாஜி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 4 நபர்கள் குணமடைந்தனர். 5 பேரிடம் பிளாஸ்மா பெறப்பட்டுள்ள நிலையில், குணமான 540 நோயாளிகளிடம் பிளாஸ்மா தானம் வழங்குமாறு பேசப்பட்டது.
இந்நிலையில் இன்று 14 நபர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன் வந்தனர்.அதில் தகுதியுள்ள நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு பிளாஸ்மா பெறப்படும் என அரசு மருத்துவமனை முதல்வர் சங்குமணி தெரிவித்தார்.