சாந்தக்குமார் கொலை வழக்கில் குற்றவாளியான ராஜகோபாலின் உடல் கவலைக்கிடமாக உள்ளதால் அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு, பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9-ம் தேதி நீதிபதியின் முன் ராஜகோபால் ஆஜராகினார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் தனியார் மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாகதான் ராஜகோபால் கொண்டுவரப்பட்டார். நீதிபதி அவரைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் சிறைக்கு செல்லும் போதே அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது.
அதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் ராஜகோபால் அனுமதிப்பட்டார். உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத காரணத்தினால் வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என ராஜகோபாலின் மகன் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை தர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் ராஜகோபாலின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியுள்ளது எனவும், அவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தம் சீராகும் வரை ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.