சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் செல்போன் ஒளி அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி என அறிவிக்கப்பட்ட போதிலும் மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மட்டும் அரசு கல்லூரிக்கு இணையாக வழங்கப்படாமல் உள்ளது. மட்டுமன்றி, இதற்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகையும் கடந்த 8 மாதமாக வழங்கப்படவில்லை என மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இவற்றை எதிர்த்து, இவ்விவகாரத்தில் அரசு விரைந்து முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று இரவில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதற்காக செல்போன் ஒளி அடித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பேசுகையில், “கொரோனா காலத்தில் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து அரசுக்கு உதவிகரமாக இருந்து, பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறோம். ஆனால் அரசு தரப்போ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காமல் உள்ளது. உடனடியாக ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக்கூறி மாணவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.