தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை இன்றிலிருந்து தொடங்குகிறது என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதனால் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் எனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. ஒருசில இடங்களில் கனமழை பெய்துவருகிறது.
அதேபோல் குமரி மாவட்டம் முழுவதும் மழைபெய்ய தொடங்கியிருக்கிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளான களியல், கடையாலுமூடு, திற்பரப்பு உட்பட பல்வேறு பகுதிகளிலும் குழித்துறை, மார்த்தாண்டம், திருவட்டார், தக்கலை, நாகர்கோவில் உட்பட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை, புளியரை, பண்பொழி, மேக்கரை, வடகரை பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது.
தேனி மாவட்டம் போடி சிலமலை ராசிங்காபுரம், சில்லமரத்துபட்டி போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.