கடலாடி அருகே அரசு பள்ளி வகுப்பறைக்குள் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து குளம் போல் தேங்கி இருப்பதால் மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே எம்.கரிசல்குளம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதனிடையே பருவமழை காரணமாக அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை நீருடன் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து சாக்கடை நீரும் கலந்து தாழ்வான பகுதியான நடுநிலைப்பள்ளியில் புகுந்து குளம்போல் தேங்கியுள்ளது. அதனை அகற்றும் பணியில் மாணவ மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பள்ளி வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும் மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சமந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளியில் மழை நீர் தேங்கா வண்ணம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.