தமிழகம், புதுச்சேரியில் இரண்டு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.