மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை விறுவிறுப்பு இல்லாமல் இருப்பதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் புகழ்பெற்ற பண்டிகைகளில் ஒன்று ஓணம். நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த வருடம் பெரிய விறுவிறுப்பு இல்லாமல் இருப்பதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஓணம் பண்டிகை என்றாலே அத்தப்பூ கோலம்தான். அதற்காக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பல்வேறு மலர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஓணம் சமயத்தில் டன் கணக்கில் கேரளாவுக்கு ஏற்றுமதியாகும் வண்ண மலர்களால் பூ வியாபாரிகள் லாபம் பார்க்க முடியும். இந்த வருடம் கேரளா செல்லும் பூக்களின் விற்பனை 60 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய வியாபாரிகள், ஓணம் என்றால் வழக்கமாக 15 டன் பூக்கள் கேரளாவுக்கு செல்லும். ஆனால் இந்த ஆண்டு 2.5 டன்கள் மட்டுமே ஏற்றுமதி ஆகியுள்ளது. 60 சதவீத பூக்கள் தேக்கம் அடைந்துள்ளன என தெரிவித்துள்ளனர். இதேபோல் குமரியில் இருந்து கேரளா செல்லும் நேந்திரம் வாழைக்காய் விற்பனையும் பாதியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரளாவில் கடுமையான மழை பெய்து, வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு கேரள அரசே ஓணம் பண்டிகையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஆண்டும் பெய்த கனமழையால் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பலரும் வீடுகளை இழந்தனர். இதனால் நடப்பாண்டு ஓணமும் விறுவிறுப்பு இல்லாமல் உள்ளது.