தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபோனி புயல் தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. நேற்று இரவு நிலவரப்படி, ஃபோனி புயல், சென்னைக்கு தென் கிழக்கே 770 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென சாரல் மழை காணப்பட்டது. அழகிய மண்டபம், கல்லுவிளை ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் பிரதான இடங்களில் மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. மதுரையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பழங்காநத்தம், மாடக்குளம், மாட்டுதாவணி, புதூர், கோரிப்பாளையம், தல்லாகுளம் ஆகிய முக்கிய இடங்களில் சுமார் அரைமணி நேரம் விடாமல் மழை பெய்தது.
அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் சூரைகாற்று வீசியதால் வாழை மரங்கள் சாய்ந்தன. நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. உதகை, குன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிமூட்டம் அதிகரித்து கடும் குளிர் நிலவி வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விட்டு விட்டு பெய்த மழையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.