வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களை ஒருபுறம் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மறுபுறம் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். மழை பெய்தால் தான் தண்ணீர் என்பதால் மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். அவ்வப்போது தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வந்தாலும், போதுமான கோடை மழை பெய்யவில்லை. ஒரு பலமான மழை பெய்தால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற மனநிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை வரை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெரியநாயக்கன்பாளையம், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் 4 சென்டி மீட்டரும், பேச்சிப்பாறை, பரமகுடியில் 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.