சென்னையின் சில பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வந்தது. பொதுமக்கள் மழை பெய்யுமா என காத்திருந்த நேரத்தில் திடீரென மழை பெய்தது. காலை 10 மணிக்கெல்லாம் மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்த நிலையில் 12 மணியளவில் நன்றாக மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த 7-ஆம் தேதி தமிழகத்தில் அதீத கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. அன்றைய தினம் 25 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் தெரிவித்தது. இதனால் மக்கள் அதற்கேற்றவாறு தயாராகினர். ஆனால் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. அன்றைய நாள் மழையும் பெய்யவில்லை. இந்நிலையில் இன்று பெய்துள்ள மழையால் சென்னையில் ஓரளவு குளிர்ச்சி ஏற்பட்டது.
இதனிடையே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 20 முதல் 22-ம் தேதிக்குள் தொடங்கும் என்று தகவலும் வெளியாகி உள்ளது.