தமிழகம்: வெப்பச்சலனத்தால் நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகம்: வெப்பச்சலனத்தால் நாளையும் மழைக்கு வாய்ப்பு
தமிழகம்: வெப்பச்சலனத்தால் நாளையும் மழைக்கு வாய்ப்பு
Published on

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகத்தின் ஓரிரு மாவட்டங்கள் தவிர, ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தொடர் மழை காரணமாக நீராவி அருவி, முள்ளிக்கடவு ஆறு, மாவரசியம்மன்கோயில், மற்றும் மலட்டாறு பகுதிகளில் பெய்த மழையால் அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முடங்கியாற்றிலும் நீர் நிறைந்து செல்கிறது. நீராவி அருவி, பல்லிளிச்சான் கணவாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக நீர்வீழ்ச்சி உருவாகி இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான வத்திராயிருப்பு, கூமாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

தென்காசியில் இலஞ்சி, மேலகரம், குற்றாலம், செங்கோட்டை, கொட்டாகுளம், காசிமேஜர்புரம், குத்துக்கல்வலசை ஆகிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. தென்காசி அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக குற்றால அருவியில் நீர் விழத் தொடங்கியுள்ளது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மதுரையில் கோரிப்பாளையம், புதூர், பெரியார் , சிம்மக்கல், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது. எள், சணல், மா, முந்திரி, சவுக்கு போன்ற சாகுபடிக்கு ஏற்றதாக இந்த மழை இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் அதனைச் சுற்றி உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பியுள்ளது. கல்லாறு, கும்பக்கரை, செலும்பாறு உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் நீர் வரத்து அதிகரித்ததால் பெரியகுளம் வராக நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து குளிர்வித்துள்ளது. உள் கர்நாடகம் முதல் கேரளா வரை ஒரு கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனத்தால், அடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகத்தின் ஓரிரு மாவட்டங்கள் தவிர, ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com