காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நாளை மறுநாள்(25.11.2021) முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
தெற்கு வங்க கடற்பகுதியில் (5.8 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இன்று மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது.
நாளை(24.11.2021) திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது.
நாளை மறுநாள்(25.11.2021) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 26.11.2021, 27.11.2021 ஆகிய இரண்டு நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.
26.11.2021 மற்றும் 27.11.2021 ஆகிய தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.