சென்னை கொரட்டூரில் தண்டவாளத்தை கடக்கு முயன்ற ரயில்வே ஊழியர் ரயில் மோதி உயிரிழந்தார்.
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே தொழிற்சங்கத்தில் மூன்று நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல மாவட்டங்களில் உள்ள ரயில்வே பணியாளர்கள் சென்னை பெரம்பூர் வந்தனர். கூட்டம் முடிந்த பின்னர் ரயில்வே ஊழியர்கள் மீண்டும் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு திரும்பிச் செல்வதற்காக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு சொந்த ஊர் திரும்பிய ரயில்வே ஊழியர் ஒருவர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தார். கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார், திருப்பூர் ரயில் நிலையத்தில் மின்துறை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை கொரட்டூரில் தண்டவாளத்தை கடக்கும்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அதிவிரைவு ரயில் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த சிவகுமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் உடன் வந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, பெரம்பூர் ரயில்வே காவலர்கள் உடனடியாக கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்து சிவகுமாரின் உடலை கைப்பற்றினர். பின்னர் உடலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பெரம்பூர் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.