இரட்டை ரயில் பாதையில் ஏற்பட்ட கணினி தொழில்நுட்பக்கோளாறு காரணமாக, தென்மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து 10 மணிநேரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை - கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் திருமங்கலம், விருதுநகர், துலுக்கப்பட்டி இடையேயான 41 கிலோமீட்டர் தொலைவுக்கான இரட்டை ரயில் பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையை திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், துலுக்கம்பட்டி ஆகிய நான்கு ரயில் நிலையங்களுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரட்டைப்பாதையை கணினியுடன் இணைக்கும் பணியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. மாலை 6 மணியை கடந்தும் பணிகள் நிறைவடையவில்லை. ஏற்கனவே இருந்த மின்னணு கருவிகளும் அகற்றப்பட்டதால், ரயில்களை இயக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்காரணமாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் திண்டுக்கல், சோழவந்தான், வாடிப்பட்டி, கூடல்நகர், மணியாச்சி போன்ற ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. அதுபோல தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள் விருதுநகர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டன. மொத்தமாக 16 விரைவு ரயில் சேவைகள் 2 முதல் 10 மணி நேரம் வரை பாதிக்கப்பட்டன. 10 மணி நேரம் வரை காத்திருந்ததால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள தெற்கு ரயில்வே, பல ரயில்களை மாற்றுப்பாதையிலும், சில ரயில்களை ரத்து செய்தும் அறிவித்திருக்கிறது, மேலும் மக்களுக்கு தாமதமாகும் ரயில்களின் விபரங்களை அறியும் வசதிகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.