தேனியில் இன்று ராகுல்காந்தி பங்கேற்கும் பரப்புரை பொதுக்கூட்ட மேடையின் மேற்கூரை சரிந்து விழுந்ததால், சீரமைக்கும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்கள் சரவணன், மகாராஜன் ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக தேனி புறவழிச்சாலையில் அன்னஞ்சி விலக்கு என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்காக மேடை அமைக்கப்பட்டது. ஒரு வாரத்துக்கு முன், பூமிபூஜை நடத்தப்பட்டு, கால்கோள் நாட்டப்பட்டு, மேடை அமைக்கப்பட்டது.
மேடை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், மேற்கூரை கம்பிகள் முற்றிலும் சரிந்தன. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அங்கு நேரில் பார்வையிட்டனர். மேற்கூரையைத் தாங்கும் அடித்தளம் பலமானதாக அமைக்கப்படாததே விபத்துக்குக் காரணம் என பின்னர் தெரியவந்தது. இதையடுத்து, 15க்கும் அதிகமான தொழிலாளர்கள் மேடையை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.