முதல்வர் மு.க.ஸ்டாலினின் சுய சரிதை நூலான ’உங்களில் ஒருவன்’ வெளியீட்டு விழாவில் பங்கேற்க ராகுல்காந்தி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சமூக நீதிக்கூட்டமைப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான தலைவர்களும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
புத்தக விழாவில் பங்கேற்கும் தலைவர்களுடன் தேசிய அளவிலான ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலினின் மிசா கால அனுபவங்கள் முதல் திருமணம், ஆரம்பக்கட்டத்தில் கட்சியில் என்னென்ன பொறுப்புகளில் இருந்தார் என்பது வரையிலான கிட்டத்தட்ட 500 பக்கங்களைக்கொண்ட இந்த சுயசரிதை புத்தகம் முதல் பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த பதிப்புகளில் அவருடைய சட்டமன்ற உரை மற்றும் பதவிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.