“நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்” என்ற புத்தகம் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் 8 ஆயிரம் புத்தகங்களும், 1 லட்சம் பிடிஎஃப் பிரதிகளும் விற்றுள்ளன.
எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான எஸ்.விஜயன் எழுதியுள்ள "நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்" எனும் புத்தகம் இன்று வெளியிடப்பட இருந்த நிலையில், தேனாம்பேட்டையில் அமைந்துள்ள பாரதி புத்தகாலயத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புத்தகத்தின் 146 பிரதிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இன்று புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தக் கூடாது எனவும் கடிதம் அளித்திருந்தனர். இது குறித்து தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் புத்தகத்தில் கட்சி சின்னங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், இது தேர்தல் விதிமுறை இல்லை எனவும் பாரதி புத்தகாலயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் பாரதி புத்தகாலய பதிப்பாளர் தெரிவித்தார். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ,தேர்தல் ஆணையமோ, தாமோ புத்தகங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை என்று தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், புத்தக பறிமுதல் விவகாரம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கிடையே "நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" என்ற அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அச்சிடப்பட்ட 8 ஆயிரம் புத்தகங்களும் விற்பனையாகியுள்ளன. மேலும், 10 ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தின் விலை ரூ.15 ஆகும். இதுதவிர புத்தகத்தின் பிடிஎஃப் பிரதிகள் 1 லட்சம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. பிடிஎஃப் பிரதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.