பொதுமக்கள் அதிகளவில் கூடுவது மீட்புப் பணிக்கு இடையூறாக இருக்கும் என வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எனவே மீட்புப்பணிக்கு இடையூறாக இல்லாமல் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 44 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சுர்ஜித் மீட்புப்பணி குறித்து வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அதில், பொதுமக்கள் அதிகளவில் கூடுவது மீட்புப் பணிக்கு இடையூறாக இருக்கும்.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்துசெல்ல பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.குழந்தை மேலும் கீழே சென்றுவிடாத வகையில் கைகள் ஏர் லாக் செய்யப்பட்டுள்ளன. ரிக் இயந்திரத்தின் பாகங்கள் பாதிக்கப்பட்டாலும், உதிரி பாகங்கள் தயாராக உள்ளதால் பணிகள் தடைபடாது என தெரிவித்துள்ளார்.