பேரிடர் மீட்புக் குழுவின் வழிமுறைப்படியே குழந்தை சுஜித் உடல் மீட்கப்பட்டது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுஜித் உடல் மீட்கப்பட்டது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “ சுஜித் மீட்புப் பணியில் கடுமையாக உழைத்தும் விமர்சனங்களை எதிர்கொள்வது களப் பணியாளர்களை கவலையடைய செய்துள்ளது. சுஜித் மீட்புப் பணிகள், மீட்டது தொடர்பாக சுஜித் பெற்றோர்களுக்கு முழுமையாக தெரியும். கும்பகோணம் தீ விபத்து குழந்தைகளின் படங்களை காட்சிப்படுத்தியதால் பல விமர்சனங்கள் ஏற்பட்டது. அதனால் சுஜித் படங்களை வெளியிடவில்லை. இறந்த பிறகு சடலத்தை மீட்பது விதிமுறைக்கு உட்பட்டு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுவின் வழிமுறைப்படியே குழந்தை சுஜித் உடல் மீட்கப்பட்டது
மீட்புப் பணியில் பல கோடி செலவானதாக வாட்ஸ் அப்பில் வரும் தகவல் முழுவதும் வதந்தி. போர்வெல் என்பது விபத்துதான், பேரிடர் அல்ல, சுஜித்தை மீட்க முடியாதது துரதிருஷ்டவசமானது. மனித சக்தியால் எந்தெந்த முயற்சிகள் முடியுமோ அந்த அனைத்து வழிகளிலும் சுஜித்தை மீட்க முயன்றோம் ” எனக் கூறியுள்ளார்.