விருத்தாசலம் அருகே 25-க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய வெறி நாயை உடனே பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றித்திரியும் வெறிநாய் ஒன்று, சாலையில் தனியாக செல்லும் நபர்களை துரத்தித் துரத்தி கடித்துக் குதறுகிறது. அத்துடன் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளையும் விட்டுவைக்காமல் கடித்து காயப்படுத்துவதால், மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாமல் வீட்டிலேயே கட்டி வைத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அந்த நாய் கடித்ததில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 25-க்கும் மேற்பட்டோர் கார்மாங்குடி ஆரம்ப சுகாதார நிலையம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறுகின்றனர். இதில் ஆறுமுகம் என்ற முதியவர் விருத்தாசலம் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார். தேவராஜ், ரவி, தர்மலிங்கம், சிறுமி இளம்பிறை என நாயிடம் கடி வாங்கியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியில் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், விவசாய வேலைக்கு செல்லும் தொழிலாளிகளும் நாயிடம் இருந்து பாதுகாப்புடன் இருப்பதற்கு கையில் தடியுடன் செல்கின்றனர். அனைவரையும் கடிக்கும் வெறி நாயை உடனே பிடித்து தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.