சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆர் என்ற குறியீடு இடப்பட்டுள்ளதால் கொள்ளையர்கள் கைவரிசையா என்ற அச்சம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
சென்னையின் புறநகர் பகுதிகளான வண்டலூர், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் அழைப்பு மணி இருக்கும் சுவிட்சுக்கு மேல் ’ஆர்’ என்று குறியீடு இடப்பட்டுள்ளதால் கொள்ளையர்களின் சங்கேத குறியீடா என்று குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதற்கேற்ப வண்டலூர் பகுதியில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை போன சம்பவம் நடந்துள்ளது.
வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கத்தில் கணபதி நகர், டீச்சர்ஸ் காலனியில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் 10 சவரன் நகைகள், பட்டுப்புடவை, லேப்டாப் போன்றவை திருடப்பட்டுள்ளதாகவும், இந்தப் புகாரை பதிவு செய்யவே காவல்துறையினர் அலைக்கழித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தை கொள்ளையர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தப்படவில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.