குஜராத்தில் இருந்து ஊர் திரும்ப படகுகளுக்கு தேவையான எரிபொருட்கள் மற்றும் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குஜராத்தில் கரை ஒதுங்கியுள்ள தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மாயமான மீனவர்களில் பலர் பல்வேறு மாநிலங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். குறிப்பாக தமிழக மீனவர்கள் 700 பேர் குஜராத் மாநிலத்தின் வேரவல் கடற்பகுதியில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.
அவர்களின் தற்போதைய நிலை, தேவைகளை அறிந்து கொள்ளும் விதமாக புதிய தலைமுறை நேரடியாக குஜராத்திற்கே சென்றுள்ளது.
அங்குள்ள மீனவர்கள், அவர்களுக்கான தேவைகள் குறித்து கூறியதாவது, “நவம்பர் 1-ஆம் தேதியே கடலுக்கு கிளம்பிவிட்டோம். மொத்தமாக 30 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை எடுத்துவருவது எங்கள் வழக்கம். 30 நாட்களுக்குள் மீண்டும் கரை திரும்பிவிடுமோம். ஆனால் இப்போது கரை திரும்புவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக தான் புயல் வரப்போவதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவசர அவசரமாக ஆங்காங்கே
கரை ஒதுங்கினோம். இதனால் நெடுந்தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் எரிபொருட்கள் எல்லாமும் முடிந்துவிட்டது. அதோடு எங்களுக்கு தற்போது சாப்பிட உணவு கூட இல்லை. எந்த அதிகாரியும் எங்களை இதுவரை வந்து சந்திக்கவில்லை. வீட்டில் இருந்து பணம் அனுப்பினால்தான் மீண்டும் எங்களது சொந்த இடத்திற்கு திரும்ப முடியும் என்ற நிலையில் இருக்கிறோம். எங்கள் படகுகளையும் இங்குள்ள மீனவர்களின் படகுகளோடு நிறுத்தி வைக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் படகுகள் எங்களது படகுகளை விட அடர்த்தியாக இருப்பதால், லேசாக மோதும் பட்சத்தில் கூட எங்கள் படகுகளுக்கு அதிக சேதம் ஏற்படும். எனவே ஊர் திரும்ப படகுகளுக்கு தேவையான எரிபொருட்கள், எங்களுக்கு தேவையான உணவு ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.