தமிழக அரசு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கிய 14 பொருட்கள் அடங்கிய பையில், ஆறு பொருட்கள் மட்டுமே இருந்ததால் ஏமாற்றமடைந்த பாட்டி ஒருவர் குறித்து 'புதிய தலைமுறை' தளத்தில் செய்தி வெளியான நிலையில், இரவே அவரது வீட்டுக்குச் சென்று முழுமையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை அதிகாரிகள் வழங்கினர்.
நெல்லை பாளையங்கோட்டை பொட்டல் பகுதியில் வசிப்பவர் ஞானசுந்தரி. 60 வயதை கடந்த இவர் நேற்று திருவண்ணநாதபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் தமிழக அரசு வழங்கியுள்ள 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வாங்கி வந்துள்ளார். ஆனால், அதில் அரசு குறிப்பிட்ட 14 பொருட்கள் அனைத்தும் கொடுக்கப்படாமல் ரவை, மைதா, உப்பு, தேயிலை, கடலை பருப்பு, சீரகம் என 6 பொருட்கள் மட்டுமே வழங்கி உள்ளனர்.
இதுபற்றி நம்மிடம் வேதனை வெளியிட்டார் அந்தப் பாட்டி. அவரது புகார் தொடர்பாக திருவண்ணநாதபுரம் நியாய விலை கடைக்கு நேரில் சென்று விசாரித்தோம். "613 ரேஷன் கார்டுகள் கொண்ட இந்த கடையில் இதுவரை 600 பைகள் மட்டுமே வந்துள்ளது. இன்னும் வரவேண்டிய 13 பைகள் வந்துவிட்டால் நாங்கள் அந்த மூதாட்டிக்கு வழங்கி விடுவோம்" எனத் தெரிவித்தனர்.
இந்தச் செய்தி வெளியிடப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, நேற்றிரவே பாட்டியின் வீடு தேடிச் சென்று அவருக்கு முழுமையான தொகுப்பை அதிகாரிகள் வழங்கினர். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், பாளையங்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் பாட்டியிடன் தொகுப்பை நேரில் வழங்கினர். அதிகாரிகளின் இந்த துரித நடவடிக்கையால் அந்தப் பாட்டி நெகிழ்ந்து நன்றி தெரிவித்தார்.
- நெல்லை நாகராஜன்